முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு அனுப்ப முதல் தவணையாக ரூ. 8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2022      தமிழகம்
Ma Subramanian 2022 05 15

Source: provided

சென்னை : தமிழக அரசின் சார்பில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அனுப்ப ரூ. 8 கோடி மதிப்புள்ள மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள், மருந்து வகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பொருட்களை பண்டல் போடும் பணிகள் நடந்து வருகின்றன. மருந்து பொருட்கள் அண்ணாநகரில் உள்ள மருந்து கிடங்கில் பண்டல் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார். இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி, பால் பவுடர் மற்றும் ரூ. 28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்களை வழங்குவதற்கான ஆணைகள் பெறப்பட்டு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

137 வகையான அத்தியாவசிய மருந்துகள், சிறப்பு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களை ரூ. 28கோடி மதிப்பில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதல் தவனையாக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 2 சிறப்பு மருந்துகள் ரூ. 8 கோடியே 87 லட்சத்து 90 ஆயிரத்து 593 மதிப்பில் வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மருந்துகள் (36 அத்தியாவசிய மருந்துகள், 39 சிறப்பு மருந்துகள்) கொள்முதல் செய்யப்பட்டு 2-ம் தவணையாக வழங்கப்பட உள்ளது.

தற்போதைய 55 மருந்துகளில் 7 மருந்து வகைகள் குளிர்சாதன வசதியில் கொண்டு செல்லத்தக்கது 48 மருந்துகள் சாதாரண வசதியில் கொண்டு செல்லத்தக்கது.  இந்த மருந்து பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் பேக்கிங் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து