முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல்லில் 2-வது நாளாக ஜவுளி நிறுவனங்கள் மூடல்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Textile 2022-05-17

Source: provided

ஈரோடு : நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கலில் மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும், பருத்தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும், நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தி, விற்பனை மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்கூடங்கள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 25 சங்கங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஜவுளி மற்றும் சார்பு நிறுவனங்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.100 கோடி அளவில் உற்பத்தி மற்றும் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே 2வது நாளாக நேற்றும் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் பன்னீர்செல்வம் பார்க்கில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெறும் ஜவுளி சந்தை மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போல ஈரோட்டில் ஜவுளி கடைகள் அதிகமுள்ள ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, டி.வி.எஸ் வீதி, காமராஜ் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்கள் நூல் விலை உயர்வை கண்டித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.   இதேபோல், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நேற்றும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், நாளொன்றுக்கு ரூ.175 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கரூர்: கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் ஓனர் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், நூல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் கரூர் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம், காமராஜபுரம், எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 2ம் நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட தையல் நிறுவனங்களை சேர்ந்த சுமார் 2.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி, டையிங், பிரிண்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் சுமார் ரூ.250கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி கூடங்கள் செயல்படுகிறது. இங்கு சட்டை, வேட்டி, துண்டு, லுங்கி உள்ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. நூல் விலை அதிகரிப்பால் நேற்று முன்தினம் முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 70 சதவீதம் விசைத்தறி கூடங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. பாலிஸ்டர் ரயான் துணி உற்பத்தி மட்டுமே நடைபெற்று வருகிறது. லுங்கி உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், இதனை நம்பி இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!