முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைக்கோடி மனிதருக்கும் அரசின் திட்டங்கள் போய் சேர வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 18 மே 2022      தமிழகம்
CM-1 2022 05 18

Source: provided

சென்னை : ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும் சரி, அந்தத் திட்டத்தின் பலன்கள் கடைக்கோடி மனிதரையும் சேரும்படி செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின்  முதல் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது, 

பலரது சிந்தனையின் கூட்டுச்சேர்க்கைதான் அரசு. அப்படிச் செயல்பட்டால்தான் அது மக்கள் அரசாக இருக்க முடியும். அந்த வகையில் பல்வேறு ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். அந்த அடிப்படையில்தான் இந்தக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள், அது ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தின் பலன் கடைக்கோடி மனிதரையும் சேரும்படி செயல்பட வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது.

 அந்த வகையில், திட்டங்களின் செயலாக்கம், நிதிப் பயன்பாடு, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு அம்சங்களை கவனிக்கவும், கண்காணிக்கவும், திட்டங்களை ஒருங்கிணைத்து அதன் பயன்பாட்டினை உயர்த்தவும் அதற்காகத் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய அரசினுடைய நோக்கமாக இருக்கிறது.  எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், எல்லாத் துறைகளும் ஒன்று போல முன்னேற்றம் காண வேண்டும்.

மருத்துவம், கல்வி, இளைஞர் நலன், வேளாண் மேலாண்மை, பெருந்தொழில்கள், நடுத்தர - சிறு -குறு தொழில்கள், நெசவாளர் மற்றும் மீனவர் நலன் என சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டையில் தீட்டப்படக்கூடிய திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. திட்டங்கள் தீட்டுவதை விட முக்கியமானது அந்தத் திட்டங்கள், அதனுடைய பயன்கள், அதனுடைய நோக்கம் சிதையாமல் நிறைவேற்றுவதுதான்.

அதுதான் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகத்தான் இது போன்ற ஆலோசனைக் குழுக்கள் அவசியமாகிறது. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படக்கூடிய 41 திட்டங்களை மாநில மற்றும் மாவட்ட அளவிலான திசா கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய நிறை, குறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்படிச் செய்து வந்தாலே, அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறி விடும்.  கேட்காத கடனும் திரும்ப வராது,  போகாத சொந்தமும் திரும்பி வராது என்று கிராமத்தில் சொல்வார்கள். அதைப் போலத்தான் ஆய்வுக்கு உட்படுத்தாத எந்தத் திட்டமும் முறையாக செயல்படாது. இதனை துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இது போன்ற ஆய்வுக் கூட்டங்களின் மூலமாக  ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூகநீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அனைவருக்கும் உறுதி செய்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து