முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை - தமிழகத்தில் இருந்து நிலங்களவை பதவிக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாகுகிறார்கள்: வரும் 3-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மே 2022      அரசியல்
election-commission-2022-05

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வரும் 3-ம் தேதி வெற்றி பெறும் வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

வேட்புமனு தாக்கல்... 

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 57 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஸ்குமார், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 29-ம் தேதியுடன்  முடிவடைகிறது.  மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் வருகிற 10-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. 

அ.தி.மு.க.விற்கு 2 இடம்...

மாநிலங்களவை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க.விற்கு 4 இடங்களும், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. அதன்படி, தி.மு.க. 3 இடங்களில் போட்டியிடும் என்றும், ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியும் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

5 சுயேச்சை வேட்பாளர்கள்...

அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ப.சிதம்பரம் நேற்று முன்தினம்  மனு தாக்கல் செய்தார். 

மனுக்கள் மீது பரிசீலனை...

மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக பத்மராஜன், அக்னி, ஸ்ரீராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன், சோழகனார், தேவராஜன் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. ஒரு வேட்பாளருக்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். அத்துடன் வேட்புமனு தாக்கலின்போது 10 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவு கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.

6 பேரும் தேர்வு...

வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது முன்மொழிவு கடிதம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அதன் அடிப்படையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் எஸ்.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். வேறு தகுதியான வேட்பு மனுக்கள் வராதபட்சத்தில் தேர்தல் நடைபெறாது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!