முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவிக்காக அரசியல் செய்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை: முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ விமர்சனம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2022      அரசியல்
Selur-Raju 2022-06-04

தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி என்றும் தமிழிசை, எல்.முருகன் போல பதவிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது: "மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளர், பழைய ஆணையாளரை போல் மெத்தனமாக இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. ஊழியர்களுக்கு கூட ஊதியம் போட நிதியில்லை. அரசு துறைகளிடம் இருந்து வர வேண்டிய நிதியை மாநகராட்சி கணக்கீட்டு அதனை பெற வேண்டும்.

மதுரையில் தற்போது வீட்டு வசதிவாரியம் சார்பில் அதிகமான வீடுகள் கட்டப்படுகிறது. அதற்கான வரி வருவாயை மாநகராட்சி பாக்கியில்லாமல் வசூலிக்க வேண்டும். இப்படி அரசு துறைகளிடம் கோடிகணக்கான வரி நிலுவையில் உள்ளது. அதனை முறையாக வசூலித்தாலே மக்கள் மீது வரி சுமையை அதிகரிக்க தேவையில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துகள் முறையாக இயக்கவில்லை.

மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அண்ணாமலை கூறி வருகிறார். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது. தமிழகத்தில் மக்கள் பணியை அதிமுக செய்கிறது.

அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி. அதிமுக காக்கா கூட்டம் அல்ல. கொள்கைக் கூட்டம். இரை போட்டால் சிலர் காக்கா கூட்டம் போல் பாஜகவிற்கு செல்லலாம்.

திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்றால் அதிமுக தனித்து நிற்க தயாராக உள்ளது. என்னுடைய இந்தக் கருத்தை எடப்பாடி, ஒபிஎஸ் ஏற்றுக் கொள்வார்கள். மத்திய அமைச்சராகுவதற்கு முன் முருகன் வேலை பிடித்தார். அவருக்கு பதவி கிடைத்தது. தமிழிசைக்கும் அதுபோலவே பதவி கிடைத்தது. இவர்களை போலவே பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்கிறார்.

மதுரையில் மேயருக்கு இணையாக ஒரு சூப்பர் மேயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் மேயருக்கெல்லாம் மேயர். எந்த மாநகராட்சியிலும் இதுபோன்ற அவலம் இல்லை. மாநகராட்சிக்கு ஆலோசனை சொல்ல மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டரீதியாக இடம் இல்லை. நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் அவருக்கு ஆலோசகர் தேவையில்லை. மேயருக்கு ஆலோசனை சொல்ல அதிகாரிகள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உள்ளனர். வணக்கத்குரிய மேயர் என்று சொல்வதே அவர் மாநகரின் முதல் குடிமகன் என்ற பெருமையை பெற்றதால்தான். ஆனால், அந்த மேயர் பதவிக்கான மரியாதையை மதுரை மேயர் கெடுத்துவிட்டார். மதுரையில் திமுகவினர் செய்வதெல்லாம் வினோதமாக உள்ளது" என்று செல்லூர் ராஜூ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து