முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து: இந்தியாவில் முக்கிய நகரங்கள் மீது தற்கொலை படை தாக்குதல் : அல் கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை

புதன்கிழமை, 8 ஜூன் 2022      இந்தியா
Taliban 2022 01 08

Source: provided

புதுடெல்லி : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத், உ.பி., மும்பை உள்ளிட்ட இந்தியாவில் முக்கிய நகரங்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல் கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்திலும், மற்றொரு செய்தி தொடர்பாளர் நவீன் ஜிண்டால், டுவிட்டர் பதிவிலும் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதற்கு இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியது. தொடர்ந்து, நபிகள் குறித்த இருவரின் கருத்தும் அரசின் கருத்தல்ல என்று மறுத்த மத்திய அரசு, அனைத்து மதங்களையும் உயர்ந்த மதிப்புடன் அரசு அணுகுவதாக விளக்கம் அளித்தது. இந்நிலையில் நபிகள் குறித்த பாஜக செய்தி தொடர்பாளர்களின் அவதூறு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அல்-கொய்தா தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அல் கொய்தா இன் சப் கான்டினன்ட் (AQIS) என்ற தீவிரவாத அமைப்பின் சார்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியிடப்பட்ட மிரட்டல் கடிதத்தின் விவரம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது., இறை தூதரான நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

டெல்லி, மும்பை, உத்தரப்பிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக அல் - கொய்தா வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து