முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல்: மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் மறுப்பு : கேரள அரசின் மனு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      இந்தியா
Mohanlal 2022 06 10

Source: provided

திருவனந்தபுரம், : நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை ரத்து செய்ய அனுமதி கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை பெரும்பாவூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் அவற்றை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியது. யானை தந்தங்களை வீட்டில் வைத்திருக்க முறையான லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால் மோகன்லாலிடம் அதற்கான லைசென்ஸ் இல்லை என தெரியவந்தது. 

இதுகுறித்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பணம் கொடுத்து தந்தங்களை வாங்கியதாக அவர் கூறினார். ஆனால் முறையான லைசென்ஸ் இல்லாததால் அவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணை பெரும்பாவூர் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  

இந்த நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய, கேரள அரசு தீர்மானித்தது. இது தொடர்பாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கேரள ஐகோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக உரிய முடிவு எடுக்க பெரும்பாவூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.  இந்த நிலையில் கேரள அரசின் மனுவை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மோகன்லால் மீதான வழக்கை தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து