முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதிகளை இரக்கமில்லாமல் தாக்குவது பேதலித்த மனநிலையையே காட்டுகிறது : காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையையே இது காட்டுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல் துறை சித்ரவதை, சிறைச்சாலை மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் "காவல் துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் "காவல் துறை சீர்த்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறைச் செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக கூறி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.  

உள்துறைச் செயலாளர், டிஜிபி அடங்கிய மாநில குழு மற்றும் ஆட்சியர், காவல்துறை எஸ்பி அடங்கிய மாவட்ட குழுக்களை அமைத்த சட்டத்தை திருத்த போதிய அவகாசம் வழங்கியும் திருத்தவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே எப்படி விசாரிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியதுடன், புகார் ஆணையம் அமைத்த சட்டத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி திருத்தம் செய்யாவிட்டால் அதை ரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்தனர். சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக அரசு தெரிவிப்பதற்கு இறுதி அவகாசம் வழங்கி வழக்கை நேற்று ஒத்திவைத்திருந்தனர். 

இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை கைதிகளை இரக்கமில்லாமல் உயிரிழக்கும் வரை தாக்குவதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல்துறையின் பேதலித்த மனநிலையையே இது காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்தார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? எனவும் நீதிபதிகள் தங்கள் தரப்பு கேள்வியாக முன்வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து