முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இதுவரை 157 கோவில்களில் குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சனிக்கிழமை, 11 ஜூன் 2022      தமிழகம்
Sekarbabu 2022 05 10

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை 157 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக கோவிலை தொல்லியல் வல்லுநர் நேரில் ஆய்வு செய்து 100 மற்றும் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான திருக்கோவிலா அல்லது கட்டப்பட்ட கோவிலா என்பதை கண்டறிந்து பழைமை வாய்ந்த தொன்மையான கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் செயல் அலுவர்கள், நிர்வாகியால் அந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் குறிப்புகள் தயார் செய்யப்பட்டு மண்டல வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள் குறித்து மண்டல வல்லுநர் குழு பரிசீலனை செய்து மாநில அளவிலான வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 

மாநில அளவிலான வல்லுநர் குழு கடந்த ஓராண்டில் தஞ்சாவூர் 141 கோவில்கள், திருச்சி 137 கோவில்கள், நாகப்பட்டினம் 137 கோவில்கள், கடலூர் 131 கோவில்கள், திருப்பூர் 129 கோவில்கள், விழுப்புரம் 118 கோவில்கள், ஈரோடு 112 கோவில்கள், மயிலாடுதுறை 108 கோவில்கள், சென்னை-2 103 கோவில்கள், தூத்துக்குடி 102 கோவில்கள், திருநெல்வேலி 92 கோவில்கள், சேலம் 91 கோவில்கள், வேலூர் 89 கோவில்கள், திருவண்ணாமலை 88 கோவில்கள், காஞ்சிபுரம் 85 கோவில்கள், சென்னை-1 82 கோவில்கள், சிவகங்கை 81 கோவில்கள், கோவை 81 கோவில்கள், மதுரை 76 கோவில்கள், திண்டுக்கல் 59 கோவில்கள் உள்பட 20 மண்டலங்களில் 2042 கோவில்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை பரிசீலித்து ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டில் இதுவரை 157 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய ஆணையர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வரும் வல்லுநர் குழுவில் குறைந்தது 150 கோவில்களின் திருப்பணி வேலைகளை பரிசீலினை செய்து ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து