முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி வழங்க அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2022      தமிழகம்
Student 2022-06-06

Source: provided

சென்னை : திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிகத்தில் கோடை விடுமுறை முடிந்ததையடுத்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பெற்றோர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து வரும் 20-ம் தேதி +2 வகுப்புகளும், 27-ம் தேதி +1 வகுப்புகளும் தொடங்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம். இதையடுத்து காலை 9.10 முதல் மாலை 4.10 வரை பள்ளிகள் செயல்படுவதற்கான மாதிரி நேரத்தை வெளியிட்டதோடு, 8 பாடவேளை கொண்டதாக பள்ளிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதே நேரத்தில் பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்டற்றவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை அந்தந்த பள்ளிகளே மேலாண்மை குழுக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா நோய்த்தொற்றும் உயர்ந்து வருவதால் தூய்மைப் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரம் காட்டினர்.

தமிழகம் முழுவதும் இன்று அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, 'கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே உள்ளன. எனவே, பள்ளி செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து