முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன் பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவு: ஆழ்கடலுக்கு செல்ல ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

திங்கட்கிழமை, 13 ஜூன் 2022      தமிழகம்
Fishermen 2022 06 13

Source: provided

சென்னை : 61 நாட்கள் நீடித்து வரும் மீன் பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைவதை ஒட்டி ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான இடைபட்ட 61 நாட்கள் மீன் பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன் பிடி தடைகாலம் தொடங்கி நடைமுறையில் இருக்கிறது. 

கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் கரைகளில் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாமல் கரையில் ஓய்வு எடுத்து கொண்டு இருக்கின்றன. 

இந்த நிலையில் 61 நாட்கள் நீடித்து வரும், மீன் பிடி தடைகாலம் இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ளது. இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடுகளில் மீனவர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். பொதுவாக இந்த மீன்பிடி தடைகாலத்தில்தான் படகுகளில் ஏற்பட்டு இருக்கும் பழுதுகளை சரி செய்வது, படகுகளுக்கு வர்ணம் பூசுவது, வலைகளை பராமரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 

அதன்படி, அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது ஆழ்கடலுக்குள் செலுத்துவதற்கு படகுகள் கம்பீரமாக கரையில் நிற்கின்றன. சில படகுகளுக்கு இறுதிகட்ட பணிகளும் நடந்து வருகின்றன. சில படகுகளில் மீனவர்கள் வலைகளை ஏற்றி தயாராக வைத்துள்ளனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஐஸ், குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றை மீனவர்கள் படகுகளில் ஏற்றி தயாராக உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து