முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்வி கொள்கைகுழுவினருடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைந்துள்ள இந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர் ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வி யியல் எழுத்தாளர் மாடசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என்று பல தரப்பட்டோரிடம் கருத்துக்களை பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர் காலத்தை மனதில் வைத்து கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உலகளாவிய கல்வி தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் வேலை வாய்ப்புக்கேற்ற பாடத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் சமத்துவமான கல்வியை தரும் வகையில் கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து