முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் சென்னை பெருநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 163 பேர் கைது: காவல்துறை

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Shankar-Jiwal 2022-05-14

Source: provided

சென்னை : சென்னை பெருநகரில் நடப்பாண்டில் இதுவரை 163 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 11 குற்றவாளிகள் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர் என காவல்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 109 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 35 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 11 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 163 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த  11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள், வழிப்பறி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 11 குற்றவாளிகள், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில், பிணை பத்திரம் மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் பிணையில் வரமுடியாத தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், உயிர்காக்கும் மருந்துகள், போதை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து