முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்: தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரம்

சனிக்கிழமை, 18 ஜூன் 2022      தமிழகம்
Rail 2022-06-18

Source: provided

சென்னை : மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் நேற்று காலை முதல் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே திரண்ட இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பிதை அடுத்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அறிமுகம் செய்தார். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 4-வது நாளாக நாடு முழுவதும் போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்தால் 12 ரயில்கள் எரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகம் அருகே திரண்ட இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோஷங்கள் எழுப்பினர். கொரோனாவால் 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கான தேர்வு நடைபெறாத நிலையில் அத்தேர்வை நடத்துமாறு இளைஞர்கள் கோரினர். 'எங்களுக்கு நீதி வேண்டும்', 'தேர்வுகளை நடத்துங்கள்' போன்ற பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக போராட்ட பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆரணி, திருவண்ணாமலை, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களே பெருமளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் வேலூரில் இளைஞர்கள் சிலர் அறவழியில் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பெரும் அளவில் ராணுவத்தில் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் சென்னை சென்ட்ரல், திருப்பூர், கோவை, மதுரை, சேலம், ஜோலார்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கான உணவகம் மற்றும் ராணுவம் சார்ந்த பிற இடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளை தமிழ்நாடு காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். வடமாநிலங்களைப்போல இந்த இளைஞர்கள் ரயில் நிலையங்களில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தலாம் என உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு காவல் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர். அனைத்து முக்கிய ரயில் நிலைய வளாகங்களிலும் வன்முறைத் தடுப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அக்னிபாத் விவகாரம் குறைந்த அளவிலேயே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இருந்தபோதிலும், தமிழ்நாடு முழுவதும் வன்முறை பரவலாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து உளவுத் துறை எச்சரிக்கை வந்துள்ளதால், பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து