முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: அரசு நிகழ்ச்சிகள் ரத்து .

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்பதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலை கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால் முதல்வர் திருமண நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார். இதே போல் நேற்று சென்னை டி.டி.கே. சாலை மியூசிக் அகாடமியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை. 

முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும் அதனால் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதே போல் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் தனியார் ஆஸ்பத்திரி திறப்பு விழா, வேலூர் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் 3 மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு 3 மாவட்டங்களிலும் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. நிர்வாகிகள் தயார் நிலையில் இருந்தனர். தொண்டர்களும், உற்சாகமாக இருந்தனர். 

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவரது வருகை குறித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதே போல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து