முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் காற்றாலை நிறுவுவது தொடர்பாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து சென்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      தமிழகம்
Senthil-Balaji 2022 05-10

Source: provided

சென்னை : கடலில் காற்றாலை நிறுவுவது சம்பந்தமாக 5 நாள் பயணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து சென்றுள்ளார். 

தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை நிலவி வருவதால் மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியுடன் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, நெல்லை மாவட்டம் கயத்தார் உள்பட பல இடங்களில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் காற்றாலை மூலம் அதிகமாக மின்சாரம் கிடைத்து வருகிறது. தற்போது ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதியிலும் காற்றாலை நிறுவ அரசு ஆலோசித்து வருகிறது. 

வெளிநாடுகளில் கடலில் காற்றாலை அமைத்து மின் உற்பத்தி பெறப்படுவதால் அதே போல் தமிழகத்தில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவதால் அந்த நாட்டுக்கு சென்று மின் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்து வருமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்து புறப்பட்டு சென்றார். 

எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் பகிர்மானம் மா.சிவலிங்கராஜன், மரபு சாரா எரிசக்தி தலைமை பொறியாளர் சுரேந்திரன் ஆகிய 5 பேர் குழுவினர் ஸ்காட்லாந்து சென்றுள்ளனர். 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து சென்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி கடலில் காற்றாலை நிறுவுவது சம்பந்தமாக ஆய்வு செய்வதுடன் அதை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது சாத்தியமாகுமா? என்பதை அறிந்து முதல்வரிடம்  எடுத்து கூறுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து