முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் மீதான விசாரணையை திசை திருப்பவே காங். போராட்டம் : அண்ணாமலை குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 20 ஜூன் 2022      தமிழகம்
Annamalai 2022 04 12

Source: provided

கோவை : ராகுல் மீதான விசாரணையை திசை திருப்பவே காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.  

பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

கடந்த 8 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால், தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் விரக்தியில் உள்ளனர். பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் 12 மருத்துவ கல்லூரிகள் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. பா.ஜ.க. ஆட்சியில்தான் கொப்பரை தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 105 ரூபாய் ஆதார விலையாக வழங்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயர்த்த முயற்சி செய்யப்படும்.

உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கூலித்தொழிலாளியாக கடந்த காலங்களில் வேலைக்கு சென்று வந்தார்கள். ஆனால், தற்போதை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியர்கள் மற்ற நாடுகளுக்கு முதலாளிகளாக செல்லும் நிலை உருவாகி உள்ளது. 

பா.ஜ.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தனர். 

பெண்களின் பாதுகாப்பு தி.மு.க. ஆட்சியில் கேள்விக்குறியாக உள்ளது. பா.ஜ.க. ஆட்சி மீது வைக்கப்படும் பொதுவான ஒரே ஒரு குற்றச்சாட்டு இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது தான். ஆனால், மணிப்பூர், கோவா போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்தும் பா.ஜ.க.வே வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பா.ஜ.க.வின் ஆட்சியை பெண்கள் பாதுகாப்பான ஆட்சியாக உணர்கின்றனர்.

ராகுல் காந்தியின் ஊழல் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தற்போது சில மாநிலங்களில் மத்திய அரசின் புதிய ராணுவ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தி எதிர்காலங்களில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து