முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்குழுவில் தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறாததால் அ.தி.மு.க.வில் காலாவதியான ஒருங்கிணைப்பாளர் பதவிகள் விதிகளை சுட்டிக்காட்டி சி.வி. சண்முகம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
CV-Shanmugam-2022-06-23

Source: provided

சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழுவில் 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது எனவும், ஓ. பன்னீர் செல்வம் இனிமேல் பொருளாளர் மட்டும் தான் எனவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் மட்டுமே என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். 

சென்னையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய சி.வி.சண்முகம் கூறியதாவது:-

வைத்திலிங்கம் தேவையற்ற கருத்துகளை, தலைமை கழக கூட்டத்தில் பேசி உள்ளார். கட்சி விதி 19-ன் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டலாம். இல்லை என்றால், பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர் கையெழுத்திட்டு கொடுத்தால், அதனை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை யாரிடமும் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால், 30 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. ஐகோர்ட் உத்தரவுப்படிதான் முறைப்படி பொதுக்குழு நடத்தப்பட்டது. சட்ட விதிமீறலும் இல்லை.

அவைத் தலைவரை இதற்கு முன்பு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாதான் நியமனம் செய்து அறிவிப்பார் என வைத்திலிங்கம் கூறினார். ஆனால், கட்சி சட்டம் அப்படியில்லை. ஜெயலலிதா என்ன கூறுகிறாரோ அதை ஏற்றுக் கொண்டோம். ஜெயலலிதா கூறியது சட்டம். ஜெயலலிதா சொல்வதுதான் எங்களுக்கு சட்டம். அதுவே வேதவாக்கு. அப்படியே ஏற்றுக் கொண்டோம். அவர் சட்டப்படி செயல்பட்டார். முதலில் அவர் அறிவிப்பார். பிறகு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறுவார். ஆனால், வைத்திலிங்கம் திட்டமிட்டு சொல்கிறார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமனம் செய்வார் என்கிறார். விதியில் அப்படி கூறப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்டு தமிழ் மகன் உசேன் தற்காலிக அவை தலைவராக இருப்பார் என அறிவித்தோம். உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. அவைத்தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது தீர்மானம் கிடையாது. இந்த பதவிக்கு பொதுக்குழு கூடிதான் நியமனம் செய்யப்பட்டது என்பது விதி. இதில் எங்கு தவறு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு என்றால் வழக்கு போடுங்கள் பார்த்து கொள்வோம். தேர்தல் பற்றி நீதிமன்றம் கூறவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டுள்ளோம்.

கட்சியை உடைத்த, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய ஓ. பன்னீர் செல்வத்திற்காக பொது மன்னிப்பு வழங்கி பதவி வழங்குவதற்காக பொதுக்குழுவை திருத்த அதிகாரம் இல்லாத போது, கட்சி சட்டத்தில் திருத்தம் செய்ததை ஏற்று கொண்டார்கள். டிச.2021-ல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்தது. அதன் முடிவுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறவில்லை. நேற்றுடன் (23-ம் தேதி)ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு காலாவாதியாகி விட்டது. இனி ஓ. பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. எடப்பாடி பழனிசாமி தலைமை கழக செயலாளர் மட்டுமே. இதுதான் இன்றைய நிலை.

இனிமேல், பொறுப்பாளர்கள் மட்டுமே கட்சியை வழிநடத்துவார்கள். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, கட்சி விதி 20, பிரிவு அ-வின் படி, புதியவர் வரும் வரை பொறுப்பாளர்கள் கட்சியை வழிநடத்துவர். பொதுக்குழுவின் முடிவுகளில் யாரும் கேள்வி கேட்க முடியாது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் 2550 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஓ. பன்னீர்செல்வத்துடன் இருக்கும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எந்த கட்சிக்கு செல்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். இதில் தி.மு.க.வினரோ, முதல்வர் ஸ்டாலினோ தலையிட வேண்டிய அவசியமில்லை. அதில் கேள்வி கேட்க முடியாது. ஸ்டாலினின் மகனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது தி.மு.க.வில் என்ன நடக்கும் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அதனால் எங்கள் கட்சி பிரச்னை குறித்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம். இவ்வாறு சண்முகம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து