முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்டந்தோறும் 29-ம் தேதி முதல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
CM-2 2022-06-25

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 29-ம் தேதி முதல் 4 நாட்கள் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

கள்ளம், கபடம் இல்லாத உங்கள் முகங்களில் இருக்கக்கூடிய இந்த இயல்பான அழகுதான் இனிமையான அனுபவத்தை தருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக மட்டும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. உங்களை எல்லாம் எனது சொந்த பிள்ளைகள் என்று கருதி அந்த உணர்வோடு உங்களை நான் வாழ்த்த வந்திருக்கிறேன். நம்மை விட இந்த காலத்து பிள்ளைகள் மிக விவரமானவர்கள். ஏனென்றால் எல்லோர் கையிலும் இப்போது மொபைல் போன் இருக்கிறது. இந்த உலகமே உங்கள் விரல் நுனிக்கு வந்துள்ளது. 

மேற்படிப்புகள் என்னென்ன உள்ளது என்பதெல்லாம் நீங்கள் இணையத்தை பார்த்து தெரிந்து கொள்ள கூடிய சூழல் இப்போது வந்துள்ளது. இருந்தாலும் உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்தெந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? இதையெல்லாம் எடுத்து கூறி, நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி. நாங்கள் ஏற்படுத்தி உள்ள இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

இதனை உற்சாகம் ஊட்ட கூடிய நிகழ்ச்சியாக உங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பள்ளிக்கல்வி என்ற ஒரு படியை தாண்டி கல்லூரி கல்வியில் அடியெடுத்து வைக்க போகிறீர்கள். மாணவர்களாகிய நீங்கள்தான் இந்த மாநிலத்தின் அறிவு சொத்துக்கள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, பரந்த எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் என்கிற இந்த திட்டம். அதன் ஒரு அங்கமாகத்தான் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 29-ம் தேதி முதல் 4 நாட்கள் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து