முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றை தலைமை விவகாரத்தால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Election 2021 12 06

Source: provided

சென்னை : ஒற்றை தலைமை விவகாரத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் படிவங்களை தாக்கல் செய்யாவிடில் அவர்களுக்கு இரட்டை இல்லை கிடைக்காது என்று தேர்தல் ஆணைய விதிகளில் உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாளாகும்.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (ஜூன் 30) கடைசி நாள் ஆகும்.

510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.கவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் கையொப்பமிடுவதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இன்றைக்குள் (30-ம் தேதி) வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே படிவங்களை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையும் போது சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதற்குள்ளாக கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் படிவங்களை சமர்ப்பிக்க தவறினால் அ.தி.மு.க வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து