முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாவின் கணவர் இறப்புக்கு கொரோனா காரணம் அல்ல : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

புதன்கிழமை, 29 ஜூன் 2022      தமிழகம்
Ma Subramanian 2022 01 10

Source: provided

சென்னை : 2 உறுப்புகள் செயலிழந்து, 95 நாட்கள் எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று உடல் உறுப்பு கிடைக்காமல்தான் நடிகை மீனாவின் கணவர் மரணம் அடைந்தார். இதனை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிபடுத்தினார். அவரது மரணத்திற்கு கொரோனா தொற்று காரணமல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாகவும், அவர் கொரோனா தொற்று காரணமாகவே மரணம் அடைந்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், அவர் உடல் உறுப்பு கிடைக்காமல்தான் மரணம் அடைந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவருக்கு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த கொரோனா பாதிப்பால் அவரது நுரையீரல் அதிக அளவு பாதிக்கப்பட்டது. அவர் கொரோனாவில் இருந்து மீண்டாலும் அவரின் நுரையீரல் பாதிப்பை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அவர் தொடர்ந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.

இதற்கிடையில், அவரின் இரண்டு உறுப்புகள் செயலிழந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து உறுப்பு அறுவை சிகிச்சை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உடல் உறுப்பு தானம் பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் உரிய நேரத்தில் உடல் உறுப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

இது தொடர்பாக மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது, "நேற்றைக்கு முன்தினம் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டது போல் தகவல் பரவி வருகிறது. இது தவறானது. அவருக்கு டிசம்பர் மாதமே கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு இருந்தது. அவர் வீட்டில் ஆக்சிஜன் உதவியுடன்தான் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆறு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையின் போது அவருக்கு இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் செயலிழந்துவிட்டது. 95 நாட்கள் எக்மோ சிகிச்சையில் இருந்தார்.

15 நாட்களுக்கு முன்னால் நான் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அப்போது சுய நினைவு இல்லாமல் இருந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் கோரப்பட்டு அவரின் ரத்தம் உள்ள உறுப்பு கிடைத்தால் அவருக்கு முன்னுரிமை அளித்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டோம்.

மகாராஷ்டிரா, பெங்களூரு உள்ளிட்ட அனைத்து இடங்களில் சொல்லி வைத்து இருந்தோம். ஆனால் அவரின் ரத்த வகையை சேர்ந்த உறுப்பு கிடைக்கவில்லை. ரத்த வகை ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றாக உள்ள இரண்டு உறுப்புகளும் கிடைக்கவில்லை. எனவே அவர் தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மரணம் அடையவில்லை" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து