முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை இல்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 29 ஜூன் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. 

மகாராஷ்டிர சட்டசபையில் இன்று சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது. 

சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் வக்கீல் ஏ.எம்.சிங்வி இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மகாராஷ்டிரா கவர்னர் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு நம்பிக்கையற்ற சிறுபான்மையாக கட்சிக்குள் இருப்பதாகவும், குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி என்றும் கூறினார். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஜனநாயக அரசியலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். தகுதிநீக்க நடைமுறையானது சபாநாயகர் முன் நிலுவையில் இருப்பதை வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஷிண்டேவின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்தநிலையில், மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவு செல்லும். கவர்னரின் உத்தரவுப்படி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை. உத்தவ் தாக்கரே அரசு இன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது. சிவசேனா கொறடா சுனில் பிரபுவின் வழக்கை வரும் 11-ம் தேதி ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து