முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது, வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும் என்று நாடு முழுவதும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

அவமதிக்கும் வகையில்... 

பா.ஜ.கவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது டுவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டு நீக்கினார்.

இந்தியாவுக்கு கண்டனம்...

இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக உதய்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் கடந்த ஜூன் 10-ம் தேதி, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து இருந்தார். அதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கன்னையா லால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர்.

கொடூரமாக கொலை...

இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுவதாகவும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கன்னையா லால் காவல்துறையில் புகார் கூறி இருந்தார். இதனிடையே ஜூன் 28-ம் தேதி தையல் கடையைத் திறந்து பணி செய்து கொண்டிருந்த கன்னையா லாலை இழுத்துத் தெருவில் போட்டு, அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்த இருவர், அக்கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டனர்.

கடும் கண்டனம்...

இந்நிலையில், நுபுர் சர்மாவின் பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த், "தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார். நுபுர் சர்மா தன் மீதான அத்தனை வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் தான் நீதிமன்றம் இந்தக் கருத்தைக் கூறியுள்ளது.

தனி நபராக காரணம்...

நீதிபதி சூரிய காந்த் மேலும் கூறுகையில், "மனுவில் நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில் அவருக்கு அச்சுறுத்தலா இல்லை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார். நூபுர் சர்மாவின் வார்த்தை ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. 

டெல்லி காவல்துறை...

நூபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்ததே, அதை டெல்லி காவல்துறை தொட்டுக்கூட பார்க்கவில்லை. ஆனால் நூபுர் சர்மா அளித்த புகாருக்கு உடனே ஒருவரைக் கைது செய்திருக்கிறீர்கள் என்று டெல்லி காவல்துறையை கண்டித்த நீதிபதி, ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. அது  ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை எவ்வாறு விவாதிக்க முடியும்.

நாட்டு மக்களிடம்...

ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் சொல்லிவிட முடியாது.  உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற செயல்களே காரணம். நூபுர் சர்மா நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவரது வழக்குரைஞர் சொல்வதும் பொறுப்பற்றதாக உள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நூபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து