முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் மழையால் சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Suriuli-Waterfall 2022 07 0

Source: provided

கம்பம் : தொடர் மழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மிக முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு பூத நாராயணன் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இருப்பதால் தேனி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 

கம்பம் கிழக்கு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசி பாறை போன்ற ஊற்று பகுதிகளிலும் தூவானம் அணையில் இருந்து வரும் தண்ணீரும் சேர்ந்து அருவியாய் கொட்டுகிறது. தற்போது கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு சுருளி அருவியில் நீர் வரத்து பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் நேற்று காலை சுருளி அருவியில் வந்து கொண்டிருந்த தண்ணீரின் வேகம் அதிகரித்து தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனினும் கம்பம் கிழக்கு வனத்துறையினர் தொடர்ந்து அருவிப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!