முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் முதல்வருக்கு மாம்பழம் பரிசளித்த வங்கதேச பிரதமர்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      இந்தியா
Mango 2022-07-04

Source: provided

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு 200 கிலோ அம்ரபாலி மாம்பழத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வங்கதேச துணைத் தூதர் மான்சுர் கூறும்போது, “எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கிடையே சிறப்பான நல்லுறவு நிலவுகிறது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முக்கிய பங்கு வகிக்கிறார். எங்கள் நாட்டில் விளையும் மாம்பழங்களில் மிகவும் சிறப்பான ரகம் அம்ரபாலி. இதை பக்கத்து நாடுகளின் தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என எங்கள் பிரதமர் விரும்புகிறார். இதன்படி பழங்களை வாங்கி உள்ளோம். இந்த மாம்பழங்கள் இரு தலைவர்களுக்கிடையிலான உறவை இனிமையானதாக்கும்” என்றார்.

மாம்பழங்களை பெற்றுக்கொண்ட முதல்வரின் முதன்மைச் செயலாளர் சமிர் கே.சின்ஹா கூறும்போது, “வங்கதேச பிரதமர், முதல்வருக்கு பரிசாக அனுப்பி வைத்தமாம்பழங்களை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் உள்ள வலிமையான உறவை வெளிப்படுத் துவதாக இது அமைந்துள்ளது” என்றார்.

0000000000000000

‘குஜராத்திலும் இலவச மின்சாரம்’: அரவிந்த் கெஜரிவால் வாக்குறுதி

அகமதாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜரிவால் பேசியதாவது., டெல்லி சிறிய மாநிலம் என்பதால் இலவச மின்சாரம் வழங்கியதாக பாஜக - காங்கிரஸ் கூறினார்கள். தற்போது பஞ்சாப் மாநிலத்தை கடவுள் கொடுத்துள்ளார். அந்த மாநிலத்திலும் மின்சாரம் இலவசமாக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இரவு நேரத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மாதந்தோறும் விவசாயிகள் ரூ. 5 ஆயிரம் கட்டணம் கட்டுகிறார்கள். குஜராத் தலைமைச் செயலகத்திலும் இரவில் தான் மின்சாரம் வரவேண்டும். அமைச்சர்களும் இரவில் பணிபுரிய வேண்டும்.

ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை உபயோகிக்கும் அமைச்சர்களின் கட்டணம் ஜீரோவாக வருகிறது. ஆனால், ஒரு விளக்கு, ஒரு மின்விசிறி உபயோகிக்கும் மக்களுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வருகிறது. இப்படி இருந்தால், ஏழைகளால் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்கமுடியும். தில்லி மற்றும் பஞ்சாபில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது குஜராத்திலும் நடைமுறைப்படுத்தப்படும். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அடுத்த சந்திப்பின்போது விரிவாக கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

__________________

6 நாட்களுக்கு பின் உதய்ப்பூரில் மீண்டும் இணைய சேவை 

உதய்பூா் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருந்த கன்னையா லால் என்பவர் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டார். தையல்காரா் கொலை செய்யப்பட்டதை அடுத்து உதய்பூா் முழுவதும் வியாபாரிகளின் போராட்டம் வெடித்ததால், உதய்பூரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன், கைப்பேசி இணையதள சேவையும் முடக்கப்பட்டது. இந்த நிலையில்,பதற்றம் தணிந்ததை அடுத்து உதய்ப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

__________________

என்னை கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன்: பட்னவீஸ்

தான் திரும்பி வருவேன் என்று கூறியபோது கேலி செய்தவர்களை மன்னித்துவிடுகிறேன் என மகாராஷ்டிர பேரவையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பேசியுள்ளார். 

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.  இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், 'நான் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தேன். ஆனால், நான் அப்படிச் சொன்னதும் பலர் என்னைக் கேலி செய்தார்கள். 

நான் கூறியதுபோல திரும்பி வந்ததுடன் என்னுடன் ஏக்நாத் ஷிண்டேவையும் அழைத்து வந்துள்ளேன். என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்கமாட்டேன். நான் அவர்களை மன்னித்துவிடுகிறேன். ஏனெனில், அரசியலுக்கு இது சரிவராது. அரசியலில் எதிரிகளின் குரலுக்கு செவிசாய்க்க அனைவரும் தயாராக வேண்டும். அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டதற்காக மக்களை சிறையில் அடைக்கிறார்கள். நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு பதில் அளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து