முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதமடித்த ரூட், பேர்ஸ்டோ அபாரம்: 5-வது டெஸ்டை வென்று சாதனையுடன் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      விளையாட்டு
England 2022 07 05

Source: provided

பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.

119 ரன்களே... 

பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 76, பேர்ஸ்டோ 72 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 119 ரன்களே தேவைப்பட்டன. 

ஜோ ரூட் - பேர்ஸ்டோ...

நேற்றும் வழக்கம்போல அதிரடியாக விளையாடினார்கள் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும். 66-வது ஓவரில் இந்தக் கூட்டணி 200 ரன்களைத் தொட்டது. ஜோ ரூட், 136 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 28-வது டெஸ்ட் சதம். 2022-ல் தனது 5-வது சதத்தை அடித்துள்ளார் ரூட். 2021 ஜனவரி முதல் விளையாடிய 24 டெஸ்டுகளில் 11 சதங்களை எடுத்துள்ளார்.

378 ரன்கள்... 

அடுத்ததாக பேர்ஸ்டோவும் சதத்தைப் பூர்த்தி செய்தார். 138 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்தார். 2022-ல் 8 டெஸ்டுகளில் 6 சதங்கள் அடித்துள்ளார் பேர்ஸ்டோ. இந்தியாவுக்கு எதிராக இந்த டெஸ்டில் இரு சதங்களும் நியூசிலாந்துக்கு எதிராக இரு சதங்களும் மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

புதிய சாதனை...

இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கியுள்ளார்கள்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்கிற புதிய சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி டெஸ்டில் அதிக ரன்களை விரட்டி வெற்றி பெற்று மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக இரு அணிகளும் டி20 தொடரில் மோதவுள்ளன. நாளை (ஜூலை 7) முதல் டி20 ஆட்டம் செளதாம்ப்டனில் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!