முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை: சென்னை ஐ.ஐ.டி தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      இந்தியா
indian-institue----2022 07 15

Source: provided

புதுடெல்லி: தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடத்திற்கு வந்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று காணொலி வழியில் வெளியிட்டார். அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு (indian institute of science) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்) முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2015-ஆம் ஆண்டுமுதல் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2022-ம் ஆண்டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-ல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.  அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது. குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து