முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் 2-வது நாளாக முடங்கியது

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2022      இந்தியா
Parliament 2022 07-18

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து இரு அவைகளும் நேற்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அவை தொடங்கிய முதல் நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நேற்று வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்தில் 2ம் நாள் அவை தொடங்கியது. 

மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு, சபாநாயகர் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். விலைவாசி பிரச்சனை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று, அவர்கள் குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.இதனையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 

இதேபோல் மாநிலங்களவை கூடியதும், விலைவாசி பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்ததால், அவையில் அமளி மூண்டது. விவாதம் நடத்த பின்னர் நேரம் ஒதுக்குவதாக உறுதியளித்த போதும், அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார். 

இந்த நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் கூடியபோது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முழக்கம் தொடர்ந்ததால் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து