முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யஷ்வந்த் சின்காவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி: நாட்டின் 15 - வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார் திரெளபதி முர்மு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      இந்தியா
throepathi-------2022-07-21

Source: provided

புதுடெல்லி: நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்தலில் யஷ்வந்த் சின்காவை விட கூடுதல் வாக்குகள் வெற்றி பெற்றார் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு. ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

18-ம் தேதி தேர்தல்...

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை (18-ம் தேதி) நடைபெற்றது. பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் 771 எம்.பி.க்கள் மற்றும் 4,025 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், 99 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு பதிவாகின. பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை...

இந்நிலையில், நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பதிவான வாக்குகள் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில்  எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. அகர வரிசைப்படி 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை ராஜ்யசபா பொதுச்செயலாளர் பிசி மோடி அறிவித்தார். அதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார்.

தொடர்ந்து முன்னிலை...

பின்னர் 2ம் சுற்று முடிவுகள் வெளியானது. அதிலும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்தார். 2-வது சுற்று முடிவில், திரெளபதி முர்மு 4,83,299 வாக்குகளும், யஷ்வந்த் சின்கா 1,89,000 வாக்குகளும் பெற்றனர். 3-வது சுற்று முடிவில் அதிகமான வாக்குகளை பெற்று திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்த திரெளபதி, மூன்று சுற்றுக்களின் முடிவில் மொத்த வாக்குகளில் 70 சதவீத வாக்குகளை பெற்றார். திரெளபதி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5,77,777. யஷ்வந்த் சின்கா பெற்ற வாக்குகள் 2,61,062.

பிரதமர் மோடி வாழ்த்து...

இந்நிலையில் தேர்தலில் வெற்றிப்பெற்று வரும் 25-ம் தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஜனாபதி தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை பிரியாவிடை...

இதற்கிடையே நாளை (23ம் தேதி) தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரியாவிடை அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து