முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கள் வரை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2022      இந்தியா
Parlimant 2022 07 26

பாராளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின்  தொடர் அமளியால் இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இதுவரை இரு அவைகளிலும் சேர்த்து 27 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று காலை மக்களவைக் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டார். எனினும் அமளி நீடித்த நிலையில் அவை நடவடிக்கை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடிய நிலையில் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அவை மீண்டும் திங்கள் கிழமை கூடுகிறது.

இதேபோல் மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, குஜராத் கள்ளச்சாராய உயிரிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் உறுப்பினருக்காக சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினார். இரு தரப்பும் பதிலுக்கு பதில் கோஷமிட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் முதலில் நண்பகல் 12 மணி வரையும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து அவை மீண்டும் திங்கள் கிழமை கூடுகிறது.

இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து 23 எம்.பி.க்களும் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் 50 மணிநேர தொடா் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்  டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காந்தி சிலை அருகே திறந்தவெளியில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் வியாழக்கிழமை கனமழை பெய்த நிலையில், தற்காலிக கூடாரம் அமைக்க அனுமதி வழங்கப்படாததால், பாராளுமன்ற பிரதான வாயிலுக்கு போராட்டக் களத்தை மாற்றினா். இந்நிலையில் நேற்று பகலில் காந்தி சிலை முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து