முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் தொழில் மயமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று துணை ஜனாதிபதி வெங்கையா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Venkaiah-Naidu 2022 07-31

தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். 

சென்னையில் நடைபெற்ற தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது, 

தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும். இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதோடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன். 

உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை. தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. 

வேகமாக மாறிவரும் சமூக, பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில், பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும். முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம். 

 

மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் துணை ஜனாதிபதி என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும், தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து