Idhayam Matrimony

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. முதல் காவலர் வரை காவல் பதக்கம் வழங்கப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2022      தமிழகம்
Stalin 2020 07-18

தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறைக்கு, ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழகக் காவல்துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.  ஜனாதிபதியுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. இது இரட்டை மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது.  தமிழ்நாடு காவல்துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது.  இரவு பகல் பாராது, வெயில் மழை பாராது, ஏன், தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. 

பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856-ம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது. 1859-ம் ஆண்டு மதராஸ் மாகாண காவல்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே நமது காவல்துறை என்பது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு முன்மாதிரியான காவல் துறை.  2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் நாள் ஜனாதிபதியின் கொடியினை தமிழ்நாடு காவல்துறைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் பெற்றுத் தந்தார்.   

இத்துறையில், முதல் முதலாக இந்தியாவிலேயே மகளிர் காவலர்களை நியமித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். தற்போது காவல்துறையில் 1 டி.ஜி.பி, 2 ஏ.டி.ஜி.பி, 14 ஐ.ஜி முதலிய பெண் காவல் உயரதிகாரிகளும், 20,000 பெண் காவலர்களும் களப்பணியாற்றி வருகிறார்கள்.  பெண்களுக்குக் காவல்துறையில் அதிகாரம் அளித்ததில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக மட்டுமல்ல, முன்னணியிலும் நமது தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது.  

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கடந்த 30 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு, பல பதக்கங்களை வென்று வருவதை நினைக்கும்போது ஒவ்வொரு தமிழ்நாட்டவரும் பெருமை கொள்ளக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது.  கடந்த ஓராண்டு காலமாக காவல்துறையின் செயல்பாடு முன்பைவிட மிக அதிகளவில் பாராட்டும்படியாக உள்ளது.  

மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை.  தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் அமைதி நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளன.  காவல் நிலைய மரணங்கள் 2018-ம் ஆண்டு 17 மரணங்கள் என்று பதிவானது, 2021–ம் ஆண்டு 4 மரணங்களாக குறைந்துள்ளது.  காவல் நிலைய மரணங்களே இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தித் தாருங்கள்  என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும்.  அமைதியான மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால்தான் ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.  இவை அனைத்தும் தமிழகம் அமைதியாக இருக்கிறது என்பதன் அடையாளங்கள் ஆகும். காவலர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காகத்தான் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில், காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பல நலத்திட்டங்களை நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளிக்கிறேன்.

காவல் அதிகாரிகளும், காவல் ஆளிநர்களும் கவலையின்றிப் பணியாற்றுவதற்கான சூழல்களை அமைத்துத் தர இந்த அரசு தயாராக உள்ளது.  ஜனாதிபதியின் விருது பெற்றிருக்கும் தமிழக காவல்துறையினர் தங்கள் காக்கிச் சட்டையில் அதன் அடையாளமான கொடியினை அணிந்து செல்வார்கள். நிஸான் என்றழைக்கப்படும் இந்தச் சின்னம் உங்களுக்குப் பெருமை சேர்க்கும். 

தமிழ்நாடு காவல்துறை தொடங்கி 160 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில், ஜனாதிபதியின் வண்ணக் கொடி பெறும் நிகழ்வை முன்னிட்டு காவல்துறை தலைமை இயக்குநர் முதல் காவலர் வரை அனைவருக்கும்  தமிழ்நாடு அரசால் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து