முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர் உறுதித் தன்மையோடு இல்லை: புதுக்கோட்டை தேர் விபத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 1 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Shekhar-Babu 2022-08-01

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் மிகவும் பழமையான பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில், முக்கிய திருவிழாவான தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் தேரில் எழுந்தருளல் செய்யப்பட்டது.

இத்தேரின் முன்னும், பின்னும் சப்பரங்களில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சுவாமிகளும் எழுந்தருளல் செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். கோயிலை சுற்றி தேரோடும் வீதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் வலம் வர வேண்டிய நிலையில், தேரிழுக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரகதாம்பாள் வீற்றிருந்த தேரானது முன்புறமாக சாய்ந்தது.

திடீரென தேர் சாய்ந்ததில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய தேரோட்டிகளான புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜி.ராஜேந்திரன், பி.வைரவன் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். அதோடு திருவிழா நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த விபத்து குறித்து தேரோட்டும் பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன், வைரவன் ஆகியோர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான தேரை இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். தேரில் இருந்து அகற்றப்பட்ட மரச்சட்டங்களையும் ஆய்வு செய்தார். கோயிலுக்குள் சென்று அம்மன், சுவாமி சிலைகளை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, துறை அதிகாரிகள், அர்ச்சகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, தேர்மீது பொருத்தப்பட்ட சட்டங்கள் உறுதித்தன்மை இல்லை என்றும், இதற்கான உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனரா என அமைச்சர் கேட்டார். அதற்பிறகு, ஆய்வு செய்து சான்று அளித்ததாக அத்துறையின் இளநிலை பொறியாளர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏதாவது உங்களால் உணர முடிந்ததா என அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு, தீபாராதனை காட்டி முடிப்பதற்குள் பக்தர்கள் தேரை இழுத்துவிட்டார்கள் என்று தேரின் மீதிருந்த அர்ச்சகர் தெரிவித்தார். மேலும், தேரோடத் தொடங்கியதும் தேர் சக்கரத்தின் அடியில் மரக்கடையை வைத்து திடீரென தடுத்ததால் குப்புற சாய்ந்துவிட்டது எனவும் பதிலளிக்கப்பட்டது.

'உங்களது பதில் மூலம் தேர் உறுதித் தன்மையோடு இல்லை' என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது என அமைச்சர் தெரிவித்தார். அதன்பிறகு, அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற அமைச்சரின் கேள்விக்கு, 15 நாட்களுக்குள் தேர் மீண்டும் கட்டப்பட்டு, தேதி குறிக்கப்பட்டு தேரிழுக்கப்படும் என அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து