முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தனியார் வங்கிக் கொள்ளை: மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கைது: 18 கிலோ தங்க நகைகளும் பறிமுதல்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Bank-robbery 2022-08-15

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். கொள்ளையர்கள் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு, ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு உதவியதாக இருவரை போலீஸார் கைது செய்திருந்தனர். முருகனுக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்த சந்தோஷ் என்பவரிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் நேற்று முன்தினம் மீட்டனர். இந்த நிலையில், இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான முருகனையும் போலீஸார் நேற்று காலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தற்போது 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தினரும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேரை கைது செய்துவிட்டோம். முக்கியக் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுதவிர மேலும் 3 பேரை தேடி வருகிறோம். மிகக் குறுகிய காலத்தில், போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஓரிரு நாளில் அனைத்து நகைகளும் மீட்கப்படும்.

கொள்ளைச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளைச் சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர். கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடிக்க நேர்த்தியாகத் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையடித்த பின்னர், என்ன செய்வது என்பதில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைக்குப்பிறகு அவர்களது திட்டம் என்பது குறித்து தெரியவரும்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் 3 பேர் கொள்ளை நடந்த வங்கியில் இருந்துள்ளனர். மேலும் 4 பேர் வெளியில் இருந்துள்ளனர். மொத்தமாக 6 முதல் 7 பேர் வரை இந்தக் கொள்ளையில் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட யார் மீதும் பெரிய அளவிலான குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. ஊடகங்களில் வந்ததுபோல், துப்பாக்கி முனையில் கொள்ளை எல்லாம் நடக்கவில்லை. கொள்ளையர்கள் கத்தி வைத்துள்ளனர். ஆனால், அதையும்கூட அவர்கள் பயன்படுத்தவில்லை" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து