முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் 9-வது முறை தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள் பங்கேற்ப்பு

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi-3 2022-08-15

நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது 9வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி வெள்ளை நிற தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் காவி நிறம் மற்றும் பச்சை நிறக் கோடுகள் இருந்தன. பார்ப்பதற்கு தேசியக் கொடி உணர்வைத் தரும் வகையில் அந்த தலைப்பாகை அமைந்துள்ளது. வெளிர் நீல கோட் அணிந்திருந்தார். சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவை ஒட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.தனது உரையில் விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி தமிழகத்தின் வேலு நாச்சியார், பாரதியார் பெயர்களையும் குறிப்பிட்டுப் பேசினார். 

ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிக்காமல் ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கான தூண். நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது. நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றனர். சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறை என நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பெண் சக்தியின் பங்களிப்பு அளப்பரியது. பெண் வெறுப்பை துடைத்தெறிவோம். பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்தால் தேச முன்னேற்ற இலக்கை சீக்கிரமாக அடையலாம் என்றார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து