முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு சீன உளவுக்கப்பல் வருகை: ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Rameswaram 2022-08-16

Source: provided

ராமேசுவரம் : இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வருகை தந்துள்ள நிலையில், ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளது. 

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் 'யுவான் வாங் 5' நேற்று வந்தடைந்தது. நேற்று (செவ்வாய்கிழமை) அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22-ம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும்.

222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது.

தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அம்பன்தோட்டா துறைமுகம் இருக்கிறது. ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

சீனாவிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான். இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். இந்த உளவுக் கப்பலால் தென் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்ததையொட்டி ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சிப்புளி பருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம், தனுஷ்கோடி அரிச்சல் முனை, அக்னீ தீர்த்தக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில், தாழ்வாக பறந்த படி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி கிழே இறங்கியும் கடற்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தனுஷ்கோடி முதல் தொண்டி வரையிலான இந்திய எல்லைக்குட்பட்ட ஆழ் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. சீன உளவுக் கப்பல் வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து