முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் மானிய உரங்கள் அக்டோபா் மாதம் முதல் விற்பனை : இடைத்தரகர்கள் ஆதிக்கம் இனி இருக்காது

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Manchuk-Mandavia 2022-08-28

Source: provided

புதுடெல்லி : ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் என்ற பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை அறிவித்து, அவா் மேலும் கூறியதாவது,

உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான இதர விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மூன்றில் 2 பங்கு இடத்தில் பாரத் என்ற வணிகப் பெயரும், பி.எம்.பி.ஜே.பி. திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.  

கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.  உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். 

ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும் போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தோ்வு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகா்களின் ஆதிக்கமும் இருக்காது என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து