முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் நிலநடுக்க நினைவக அருங்காட்சியகம் திறப்பு: ரூ. 4,400 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Modi-1 2022-08-28

Source: provided

பூஜ் : குஜராத்தின் பூஜ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் நேற்று அவர் அடிக்கல் நாட்டினார்.  

குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 2 நிமிடங்களே நீடித்த இந்த நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் கூட உணரப்பட்டது. 

குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடியோடு சரிந்தன. நிலநடுக்கத்திற்கு பின்னரும் 600 முறை 2.8 முதல் 5.9 வரையிலான ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் நீடித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தின. இந்த நிலநடுக்க பாதிப்பின் நினைவாக குஜராத்தின் பூஜ் பகுதியில் நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் பிரதமர் மோடி குஜராத்தின் பூஜ் நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,  நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்களை நினைத்து பார்க்கிறேன். 2-வது நாளும் நான் இந்த பகுதிக்கு வந்தேன். அப்போது நான் முதல்வராக இருக்கவில்லை. ஒரு தொண்டனாகவே இருந்தேன். என்னால் எத்தனை பேரை காப்பாற்ற முடியும் என எனக்கு தெரியாது. ஆனால், உங்கள் அனைவருடனும் இருக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன் என கூறினார். 

2001 நிலநடுக்கத்திற்கு பின்பு கட்ச் மாவட்டம் பாதிப்பு நிலையில் இருந்து மீள முடியாது என பலர் கூறினர். ஆனால் இந்த பகுதி மக்கள் அந்த காட்சியை மாற்றியிருக்கின்றனர். குஜராத்தில் முதலீடுகளை மேற்கொள்ள விடாமல் அதனை தடுப்பதற்கான சதிதிட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், வளம் அடைவதற்கான ஒரு புதிய வழியை குஜராத் தேர்ந்தெடுத்தது என்று பிரதமர் மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து