முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றுமைக்கு சான்றாக திகழ்ந்திடும் கேரள மக்களின் ஓணம் பண்டிகை:

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Onam-festival 2022-08-28

Source: provided

பண்டை காலத்தில் மலையாள மண்ணை ஆண்ட மாபெரும் வள்ளலான மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட திட்டமிட்ட திருமால் அச்சக்ரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டுள்ளார்.அதற்கு ஒப்புக் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியின் முன்பாக வாமன அவதாரம் எடுத்த திருமால் முதலடியில் பூமியையும்,இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்துள்ளார்.பின்னர் மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று திருமால் கேட்டவுடன் வள்ளலான மகாபலி சக்கரவர்த்தி தனது தலையை காண்பிக்க, திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து பாதாளத்தில் தள்ளியுள்ளார்.அப்போது மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலான மகாபலி சக்கரவர்த்தி தனது ஆணவத்தை இழந்து திருமாலிடம்,ஆண்டு தோறும் தன்னுடைய மக்களை காண அருள்புரிந்திட வேண்டும் என்று மனதுருகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாபலி சக்ரவர்த்தியின் இந்த விருப்பத்தினை ஏற்ற திருமால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோண தினத்தன்று மக்களை சந்தித்துக் கொள்ளலாம் என்று அருள்புரிந்தார். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் திருவோண தினத்தன்று  மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை மனமுவந்து வரவேற்றிடும் விதமாக ஓணம் திருநாள் மலையாள மொழி பேசிடும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சாதி,மத.பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து மலையாள மொழிபேசிடும் மக்களால் ஓணம் பண்டிகை 10நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதற்காக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களது சொந்த மண்ணுக்கு திரும்பி வந்து சொந்தங்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த பண்டிகையின் போது மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்றிடும் விதமாக தங்களது வீடுகளில் பலவண்ணங்களில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்கின்றனர்.பின்னர் திருவோண திருநாளில் புத்தாடைகளை அணிந்தும்,பட்டாசுகளை வெடித்தும்,விதவிதமான உணவு பதார்த்தங்களை சமைத்து விருந்துண்டும்,ஊஞ்சலாட்டம்,மோகினியாட்டம்,கதகளி போன்ற நடனங்களை முண்டு கட்டி செண்டை மேளம் முழங்கிட ஆடியும்,பல்வேறு சுற்றுலா தலங்களுக்கச் சென்று படகுசவாரி,யானை சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் புகழ்பெற்ற மலபார் படகு போட்டியை காண உலகமெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் திரள்வது வழக்கமான ஒன்றாகும்.ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் கொண்டாடிடும் 10நாட்களும் மலையாள மொழி பேசிடும் மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி திளைத்து மகிழந்திடுவர் என்பதே அம்மாநில மக்களின் ஒற்றுமைக்கு சான்றாக திகழ்கிறது..

எனினும் கடந்த ஆண்டுகள் போல் கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முககவசம் அணிதல் என கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் இந்த ஆண்டு கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் ஓணம் பண்டிகை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற செப்டம்பர் 8-ம் தேதி ஓணம்பண்டிகை கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து