முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து வழக்கு: தமிழக அரசின் முடிவிற்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் மறுப்பு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022      இந்தியா
supreme-court 2022-08-29

Source: provided

புதுடெல்லி: அனைத்து சாதியினரையும் தமிழக கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவிற்கு தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவிற்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளில் ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கடந்த 22-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என்றும், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்தெந்த கோவில்களில் எந்தெந்த ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழு நியமிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது.

மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே மனுக்கள் நிலுவையில் உள்ளதால், உங்கள் மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து