முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிள்ளையார்பட்டியில் கோலாகலமாக நடந்த தேரோட்டம்: கற்பக விநாயகருக்கு கோவில் திருக்குளத்தில் இன்று தீர்த்தவாரி : மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Ganash 2022-08-30

Source: provided

காரைக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இன்று கற்பக விநாயகருக்கு கோவில் திருக்குளத்தில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் செய்யப்படுகிறது. இரவு பஞ்ச மூர்த்தி புறப்பாடு நிகழ்வும் நடைபெறுகிறது. 

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இங்கு மூலவராக விநாயகப் பெருமான் காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளிலிருந்து தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்திலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் கற்பக விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 

விழாவில் கடந்த 27-ம் தேதி கஜமுக சூரசம்காரம் நடந்தது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். முன்னதாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.  அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கற்பக விநாயகர் வீதி உலா வந்தார். சிறிய தேரில் சண்டிகேஸ்வரர் வலம் வந்தார்.  இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். 

தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதன் பின் விநாயகர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த தேரோட்டம் இந்த ஆண்டு நேற்று மாலை நடை பெற்றதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு இருந்தது. 

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மூலவரான கற்பக விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கும் அதன்படி. இன்று சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று (30-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு கற்பக விநாயகர் காட்சியளித்தார். இரவு 10 மணி வரை இந்த தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியான இன்று காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிற்பகலில் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்தி சுவாமி புறப்பாடும் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முதல் பிள்ளையார்பட்டியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து