முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூதிக்குள் தொழுகையின்போது குண்டுவெடிப்பு : ஆப்கனில் மதகுரு உள்பட 18 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      உலகம்
Afghanistan 2022 09 02

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்குள் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் மதகுரு உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  

ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் நேற்று  மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் கொல்லப்பட்டார். தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 18-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், காயம் அடைந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.  தலிபான் உயர்மட்ட அமைச்சர்கள் மீது குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் அப்துல் கானி பரதார் அங்கு சென்று திரும்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் மவுலானா முஜிபுர் ரஹ்மான் அன்சாரியை அவர் சந்தித்துள்ளார். இந்நிலையில் அவரை கொல்ல திட்டமிட்டு இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மாகாண மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று ஹெராத் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் ஷா ரசூலி தெரிவித்துள்ளார்.  ஆப்கனிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்சாரியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து