முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் நாளை நடைபெறுகிறது

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2022      சினிமா
Tamil-Nadu-Assembly-2022-01-22

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் என 23 தயாரிப்பாளர்களுக்கு 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008 –2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013–2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதிவாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு ரூ.52 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையும் விருதாளர்களின் பெயர் பொறித்தத் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்கள் அனைவரும் விழாவிற்கு மாலை 4.00 மணிக்கு தவறாமல் அரங்கத்திற்கு நேரில் வருகைதந்து, பதிவு செய்தல், கையொப்பமிடுதல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து