முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை காசிவிஸ்வநாதர் கோவில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
Tanjore-Statue-2022-09-22

தஞ்சை முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதசாமி கோவிலில் இருந்த காலசம்ஹாரமூர்த்தி சிலை அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தில் காசி விஸ்வநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலசம்ஹாரமூர்த்தி என்ற திரிபுராந்தக மூர்த்தியின் 82.3 செ.மீ. உயரம் கொண்ட சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அதே வடிவில் போலி சிலையை மர்ம நபர்கள் வைத்து விட்டு சென்றனர்.

அது போலி சிலை போல் உள்ளது என சந்தேகம் அடைந்த கோவில் செயல் அலுவலர் சுரேஷ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து புதுச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்தை தொடர்பு கொண்டு காசி விஸ்வநாத கோவிலில் எடுக்கப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். 

அதன்படி சிலைகளின் படங்களை பெற்ற பிறகு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்கள் மற்றும் தனியார் சிற்றேடுகளில் சிலைகளை தேடுவதற்காக குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒரு விரிவான தேடலுக்கு பிறகு தற்போது கோவிலில் வழிபட்டு வரும் காலசம்ஹாரமூர்த்தி சிலை போலியானது என்பது உறுதிபடுத்தப்பட்டது. 

மேலும் உண்மையான சிலையானது அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டிஸ் ஏல மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து காலசம்ஹாரமூர்த்தி சிலையை மீட்டு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து