முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு மாத சட்டவிரோத காவல்: இரண்டு பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

நான்கு மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, முத்துலட்சுமியின் கணவர் மனோகரன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், "கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளனர். அதற்கான காரணங்களை கூறவில்லை. எனவே முத்துலட்சுமியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தனர். இதேபோல சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் திவ்யாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், "குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்துவிட்டது. அதன் அடிப்படையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசும் மறுநாளே ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான ஆவணங்களை உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட மறுநாள் தான் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை அறிவுரை கழகம் ஏற்க மறுத்தால் உடனடியாக குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. எனவே, 128 நாட்கள் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்ட மகாலட்சுமி மற்றும் சத்யா ஆகியோருக்கு தமிழக அரசு தலா 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகைய 6 வாரங்களில் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து