முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பு

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணை வேறு ஒரு அமர்வின் விசாரணைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றம் தரப்பில், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது என்பது அடிப்படை மத நடைமுறை இல்லை என்றும் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத சுதந்திரம் சில நியாயமான தடைகளுக்கு உட்பட்டதே என்றும் வாதிடப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, நிர்ணயிக்கப்பட்ட சீருடை உள்ள அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அரசியல் சாசன ரீதியாக அனுமதிக்கத்தக்கதே என்றும் வாதிடப்பட்டது.

இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்த்தை அணுகினர். அவர்கள் தரப்பில், ஹிஜாப் அணிவது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19(1)(a)ன்படி தங்களின் உரிமை என்று வாதிடப்பட்டது. அதேபோல் அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 25ன் படி ஹிஜாப் தனிநபர் உரிமை சார்ந்தது என்றும் அதனால் அதன்மீது கர்நாடக உயர் நீதிமன்றம் அத்தியாவசிய மத நடைமுறைகள் பரீட்சையை பிரயோகப்படுத்தியிருக்க வேண்டாம் என்றும் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடைசியாக நடந்த வாதத்தில் கர்நாடகா அரசுத் தரப்பில் ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட பெண்கள் ஹிஜாபை எதிர்த்துப் போராடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாபுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இயல்பானவை அல்ல அதன் பின்னர் மிகப்பெரிய சதி நடக்கிறது என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதை தடை செய்வதால் தனிநபர் சுதந்திரமோ இஸ்லாமிய மாணவிகளின் உரிமையோ பறிபோகாது" என்று நீதிபதி ஹேமந்த் குப்தா கூறினார். அதேவேளையில் நீதிபதி சுஷாந்த் துலியா கூறும்போது, "ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறையா இல்லையா என்று கர்நாடக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததே தவறு. சுப்ரீம் கோர்ட்த்தில் விசாரணைக்கு வந்த பிஜோ இமானுவேல் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிபதி துலியா, ஒரு பழக்கம் நடமுறையில் உள்ளதா அது நிறுவப்பட்டதா, அது அங்கீகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஹிஜாப் அணிதல் என்பது இந்த மூன்று புள்ளிகளையும் உள்ளடக்கியுள்ளது" என்றார்.

நீதிபதி துலியா மேலும் கூறுகையில், "பெண் குழந்தைகளின் கல்வி என்பது மிகவும் முக்கியமானது. அந்த இலக்கில் எக்காரணம் கொண்டும் தடை வரக்கூடாது. இந்தியாவின் கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த சமூகம் இனியும் பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கக்கூடாது. பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா என்பதை நாம் யோசிக்க வேண்டும். என் சக நீதிபதி ஹேமந்த் குப்தா மீது நான் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன். இருப்பினும் இந்த வழக்கில் அவர் தீர்ப்பில் இருந்து நான் முரண்படுகிறேன்" என்றார். நீதிபதி ஹேமந்த் குப்தா வரும் 16 ஆம் தேதி (அக்.16) ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் வழக்கில் இருநீதிபதிகள் அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிசீலனைக்கு வழக்கு பரிந்ந்துரைக்கப்பட்டது. இனி தலைமை நீதிபதி இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து