முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நீட் தேர்வை' கட்டாயமாக்கியதை எதிர்த்த வழக்கில்: தமிழக அரசு கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு: விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை 12 வாரத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை கடிதம்... 

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு...

அதில், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்பையில் தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, "மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை 2021" என்ற மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதா ஜனாதிபதியின் முன்பு பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கை 12 வாரம் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

கோரிக்கை ஏற்பு...

இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 12 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ரிட் மனு தாக்கல்...

முன்னதாக, நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த 2020-ல் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளதால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்ககப்பட்டுள்ளனர். 

சட்ட திருத்தத்தை...

இதுவரை நீட் தேர்வு வேண்டாம் என்றே கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதுதான் நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டு கொண்டு வந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து