முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீதேவி பெயரில் மந்திரவாதி லீலைகள்: கேரளாவில் நரபலி விவகாரத்தில் கைதானவர் குறித்து திடுக் தகவல்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2022      இந்தியா
Kerala 2022-10-14

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர் ஸ்ரீதேவி என்ற பெயரில் மந்திரவாதி லீலைகள் நடத்திய தற்போது விசாரணையல் தெரியவந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள். காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர். நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர்.

மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஷபியை செல்லமாக ரஷீத் என்று அவரின் நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர். எர்ணாகுளத்தில் இருக்கும் பெரும்பாவூர் பகுதியில் இவர் வசித்து வந்துள்ளார். இவர் வெறும் 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் 3 வயது பெண் பேர குழந்தை ஒருவரும் உள்ளார். இவர் ஒரு பாலியல் சைக்கோ என போலீசார் கூறி உள்ளனர்.

பேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற பெயரில் ஒரு பொய்யான கணக்கை உருவாக்கி அதன் மூலம் இவர் பகவல் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். ஸ்ரீதேவி என்ற பெண்ணின் புகைப்படத்தை வைத்து. பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுடன் பேசி உள்ளார். பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்கு ஷபிதான் ஸ்ரீதேவி என்பதே இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து