முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதித்துறை சந்திக்கும் முக்கியமான சவால்களில் ஒன்று தாமதமான நீதி: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022 09 08

தாமதமான நீதி என்பது நீதித்துறை சந்திக்கும் சவால்களில் ஒன்று. இந்த விஷயமும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்." என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சார்பில், அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் நடக்கும் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்

இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாடு, மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் சட்ட அமைச்சர்களுக்கு அவர்கள் பகுதிகளில் அமலில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்தும் புதிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மாநிலங்களுக்குள் இருக்கும் பரஸ்பர ஒத்துழைப்புகளை அதிகரிக்கவும் உதவும்

இந்த மாநாட்டில், ஒட்டுமொத்தமாக சட்டத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, காலாவதியான, தேவையற்ற சட்டங்களை நீக்குதல், நீதிக்கான அணுகலை எளிமையாக்குவது, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பல தலைப்புகளில் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள், செயலாளர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியதாவது.,"கடந்த எட்டு ஆண்டுகளாக தேவையற்ற சட்டங்கள் நீக்குவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த, தேவையற்ற பல சட்டங்கள் இன்னும் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. மாநில சட்ட அமைச்சர்கள் இதுகுறித்து இந்த மாநாட்டில் மறுஆய்வு செய்து வாழ்க்கையை எளிதாக வாழ்வதையும், நீதி எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

தாமதமான நீதி என்பது நீதித்துறை சந்திக்கும் சவால்களில் ஒன்று இந்த விஷயமும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குஜராத் மாநிலத்தில் உள்ள மாலை நீதிமன்றங்களால் அம்மாநில நீதித்துறையின் சுமைகள் பெருமளவு குறைந்தன.

ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, அது மக்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அது பிரந்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒரு சட்டம் இயற்றப்படும் போதே அது எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் வழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. நாமும் அந்த நடைமுறையை நோக்கி நகரவேண்டும்".இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து