முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரித்த இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2022      வர்த்தகம்
Rupees- 2022-10-05

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2 மாதங்களாக சரிந்து வந்தது. இந்நிலையில் கையிருப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்தியா வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது. இதனிடையே, சமீபகாலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், இந்தியா அதிக அளவில் கைவசம் உள்ள அமெரிக்க டாலரை சந்தையில் வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிடம் உள்ள அந்நிய செலாவணி டாலர் கையிருப்பு பெருமளவு குறைந்து வந்தது.

இந்தியாவிடம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சபட்சமாக அந்நிய செலாவணி கையிருப்பாக 645 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தது. ஆனால், சமீபகாலமாக கையிருப்பு டாலர்கள் அளவு தொடர்ந்து குறைந்து வந்தது.

குறிப்பாக, சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவின் கையிருப்பில் இருந்த அமெரிக்க டாலர்களின் அளவு குறைந்து வந்தது.

அதன் ஒருபகுதியாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் கையிருப்பு உள்ள அமெரிக்க டாலர்களின் மதிப்பு 571 பில்லியனாக குறைந்தது. இதற்கு, வட்டி விகிதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை, வங்கி வட்டி விகிதம், பங்குச்சந்தை சரிவு உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு பின் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 204 மில்லியன் டாலர்கள் அதிகரித்து மொத்தம் 532 பில்லியன் டாலர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு அதிகரித்ததால் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து